Friday 19 May 2017

கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திரிச்சு...

வணக்கம் நண்பர்களே...

போட்டோ எடுப்பது என்னுடைய முக்கியமான ஒரு பொழுது போக்கு.. அதிலும் ட்ரெயின்களை எடுப்பது என்றால்.. சொல்லவே வேண்டாம்... என்னிடம் இருக்கும் பல்லாயிரம் போட்டோக்களில் அதிகம் இடம்பிடித்திருப்பது ட்ரெயின்கள் தான்..!


எனக்கு தொடரூந்துக்கள், அவை பயணிக்கும் தண்டவாளங்கள், ரெயில்வே நிலையங்கள், அதில் வரும் அறிவிப்பு ஒலிகள், தண்டவாளங்களில் மணக்கும் ஓயில் வாசம் இவை எல்லாம் மிகவும் பிடிக்கும்..! எப்போதெல்லாம் மனம் கனமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் தனிமையில் இருக்கும் தொடரூந்து நிலையம் சென்று அமர்ந்து கொள்வேன்.

அதைப் போல ஒரு சுகமான அனுபவம் வேறேதும் இல்லை..!

வாருங்கள், இன்று ஒருசில ட்ரெயின்களை சுற்றிக் காட்டுகிறேன்..!


01, இது சுவிஸ் ட்ரெயின்..! கடந்த ஆண்டு சுற்றுலா சென்றபோது எடுத்தேன். உள்ளே மிகவும் அழகாக இருக்கும்..!


02, இது இங்கு பரிசில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ட்ரெயின். நிலமட்டத்தோடு கமெராவை வைத்து, படுத்திருந்து எடுத்தது. போட்டோ எடுக்கும் போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவர்கள் கிடக்கிறார்கள் :) :) 



03, பிரான்சில் உள்ள போர்தொ எனும் நகரில் ஓடும் அழகிய ட்ராம் இது. 2014 இல் சுற்றுலா சென்றிருந்தபோது எடுத்தோம்..! கறுப்பு நிற அட்டை ஊர்வது போல அழகாகச் செல்லும் இந்த ட்ராம்..!! படத்தில் உள்ள அந்த ‘ஹாண்ட்சம்’ போய் நான் தான் :) :) 

அப்புறம் போட்டோவை எடுத்தவர்.. ஒரு உலகப் புகழ்பெற்ற, அழகான, அறிவான போட்டோகிராபர்.

( அவரின் அனுமதி இல்லாம பெயரைச் சொல்லக் கூடாது என்று அம்மம்மா சொல்லி இருக்கிறா ). 


04, இவை  பரிசில் உள்ள ‘மொன்பர்னாஸ்’ எனப்படும் மாபெரும் தொடரூந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தொடரூந்துகள். இவற்றின் பெயர் TGV ஆகும். உலகின் அதிவேக தொடரூந்துக்களில் 2 வது இடத்தில் இவை உள்ளன. 


05, இது எங்கே எடுத்தேன் என்று மறந்து விட்டேன். இங்கு பிரான்சில் தான்... நினைவுக்கு வந்தால் பின்னர் சொல்கிறேன். :) 


06, இது பரிசில் ஓடும் RER A எனப்படும் தொடரூந்து. ஐரோப்பாவிலேயே அதிக பயணிகளை ஏற்றி இறக்கும் தொடரூந்து இது. 


07, இந்த அழகிய தொடரூந்தைப் பற்றி அறிய 10 வது குறிப்பை வாசியுங்கள். அதன் உள் பக்கம் தான் இது. இப்போட்டோவை எடுக்கும் போது ட்ரெயினில் நான் மட்டும்தான் பயணித்தேன். 

அப்ப பாருங்களேன் :) 


08, இந்த அழகிய ட்ராம் பரிசில் ஓடுகிறது. எங்கள் வீட்டுக்கு முன்னால் ஓடுவது இதன் ஸ்பெஷல்..!! இதுவரை பரிசிலே பதினொரு ட்ராம் சேவைகள் வந்துவிட்டன. அவற்றிலே மிகவும் அழகானது இதுதான். 


09, இது பரிசில் இருந்து அண்டை மாகாணங்களுக்குச் செல்லும் TER எனப்படும் ட்ரெயின். நேற்று  ( 18.05.2017 ) எடுத்த போட்டோ இது. ‘பிக்கார்தி’ எனப்படும் மாகாணம் நோக்கி, அடிச்சுப் பிய்ச்சுக்கொண்டு போறார்..!




 10, இவதான் பிரான்சில்  மிகவும் அழகான, எனக்கு மிகவும் பிடித்த ட்ரெயின். இவவுக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் ‘பிங்கி’.  எல்லோரும் ‘உங்கட பிங்கி’ ‘உங்கட பிங்கி’ என்று சொல்லி, இந்த அழகிய ட்ரெயினை எனக்கு பரிசாக தந்து விட்டார்கள் ( நம்போணும் சொல்லிட்டன் :) ) 



11, இது மேட் இன் ஜெர்மன். இவரின் பெயர் ICE. இந்த ஐஸ் தான் தினமும் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் இடையே மக்களை ஏற்றி இறக்குது. நான் இன்னும் இதில் ஏறவில்லை. 


இப்போதைக்கு இவ்வளவும் காணும். இன்னும் நிறைய போட்டோக்கள், கதைகள், நினைவுகள் எல்லாம் இருக்கு... போகப் போகச் சொல்கிறேன்.

நன்றி எல்லோருக்கும்...!!

குறிப்பு - மொபைலில் பதிவை வாசிப்பவர்கள், போட்டோக்களின் மீது டச் செய்தால், அவை தனியாக ஓபன் ஆகி, HD தரத்தில் அழகாக தெரியும். இவை எல்லாமே உயர் தரத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் ஆகும்..!!

2 comments: